Showing posts with label அசைவ உணவு. Show all posts
Showing posts with label அசைவ உணவு. Show all posts

Sunday, December 27, 2015

Meat ball with home made sauce



தேவையான பொருட்கள்: 
கிரௌண்ட் மீட் (கொத்துக்கறி) - 1 கப்
  1. பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய புதினா - 1 ஸ்பூன்  
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 ஸ்பூன்
முட்டை - 1 
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
* தேவையான பொருட்களில் உள்ள அனைத்தையும் நன்றாக பிசைந்து குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைக்கவும்.
* கொதிக்கும் நீரில் இந்த மீட் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, மெதுவாகப்போடவும்.
* சிறுதீயில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதை ஆவியிலும் வேக வைக்கலாம்.

ஸாஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் -  1/4 கப்
வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  - 2 கப்  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் - 2 சிறிய டின் 
கீறிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல் 
வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ( விருப்பம் இருந்தால்) - 4 இலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

வெண்ணை  - 1 ஸ்பூன்  

செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு தாளிக்கவும். இத்துடன் வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். 
* சிறிது வதக்கிய பின் வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் (வரமிளகாயினை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊரவைத்து, பூண்டு சேர்த்து கண் மை போல அரைக்கவும்) விழுது சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய்த் தூள்,மல்லித்தூள்,கறி மசால் தூள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். 
* இப்பொழுது வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்று கலக்கவும்.
* இதில் உப்புத்தூவி, தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு 



காரகறி காடை மசாலா/Beef red curry with quail eggs









தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய மாமிசம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு paste
தக்காளி paste
வெங்காயம்
மிளகாய் பொடி
Pepper Pwdr
மஞ்சள் தூள்
கரம் மசாலா
உப்பு
நெய்
வேகவைத்த காடை முட்டை

செய்முறை:
* நெய்யில் வெங்காயம், இபூ paste இரண்டையும் வதக்கவும்
* மசாலா powders சேர்த்து வதக்கவும்
* தக்காளி paste, மாமிசம் சேர்த்து சுருள வேகவிடவும்.
* இறக்கும் முன் பச்சை மிளகாய் மற்றும் காடை முட்டைகளை பிரட்டி இறக்கவும்.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Nithi" அவர்களுக்கு நன்றி. 

Saturday, October 24, 2015

இறால் மசாலா



தேவையான பொருட்கள்:
இறால் - 300 gm
குடை மிளகாய் - பாதி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
கேரட் - 1
சில்லி பேஸ்ட் - 2 ஸ்பூன் 
கறிவேப்பிலை 
உப்பு
வெண்ணெய் - 1 tsp

செய்முறை:
* கடாயில் வெண்ணெய் சூடு செய்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
* இதனுடன் பூண்டு, கறிவேப்பிலை, சில்லி பேஸ்ட், தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். 
* பின்பு இறால், கேரட் சேர்த்து மேலும் 7 நிமிடங்கள் வேக விடவும். 

* ஈரப்பதம் இல்லாமல் வெந்த பிறகு கடைசியில் குடை மிளகாய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான இறால் மசாலா ரெடி.

இந்த சுவையான, பாரம்பரிய பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Sathya Vani" அவர்களுக்கு நன்றி. 

ஸ்டேக்



செய்முறை:

* வாணலியில் நிறைய வெண்ணெயை நிறைய விடவும்
* வெட்டிய ஸ்டேக் துண்டுகளை அதில் போடவும்
* சற்று உயர்வெப்பத்தில் உப்பை தூவி வறுக்கவும்
* ஏழு எட்டு நிமிடங்களில் ஸ்டேக் தயார். ரொம்ப வேகவிடவேண்டாம்... கடிக்கும் பதம் வந்தபின் நான் எடுத்துவிடுவேன்.
*  கருப்பாக எல்லாம் விடுவது கிடையாது. அது இறைச்சியின் சுவையை கெடுப்பது மாதிரி. அதுக்குன்னு ரொம்ப சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடவேண்டாம். ஸ்டேக் உள்ள ஜூஸியாகவும் இருக்கணும், சமைக்கபட்டிருக்கவும் வேண்டும். அந்த பதத்தில் டெக்னிக்கா எடுக்கணும்.

அதன்பின் வாணலியில் உள்ள ஆயில், கொழுப்பு எல்லாவற்றையும் ஸ்டேக் துண்டுகள் மேல் ஊற்றவும். பச்சை வெங்காயம் ஒன்றை வெட்டவும். வெங்காயத்தை கடித்துக்கொண்டே ஸ்டேக்கை மெதுவாக ரசித்து உண்ணவும். மசாலா, மிளகாய், பெப்பர் எதுவுமே தேவையில்லாமல் ஸ்டேக்கின் சுவையே தேவாமிருதமாக இருந்தது. வெங்காயமும் கறியும் சேருகையில் பேரானந்தம் சித்திக்கும். ஒருதரம் இப்படி மசாலா இல்லாம வெங்காயத்தை கடிச்சுகிட்டு சாப்பிட்டால் அதன்பின் அந்த பக்கமே போகமாட்டோம்.

பச்சை வெங்காயம் இயற்கையான கொலஸ்டிரால் குறைக்கும் தன்மை உடையது. தினம் 1 கப் ஒயின் சாப்பிட்டால் மாரடைப்பு வராது என்பார்கள். தினம் 1 பச்சை வெங்காயம் சாப்பிடுவது ரெட் ஒயினை எல்லாம் தூக்கி அடிக்கும் சக்தி கொண்ட மாரடைப்பை குணப்படுத்தும் மருந்தாகும். மூலவியாதி இருப்பவர்கள், மூக்கில் ரத்தமா ஒழுகுது என்பவர்களுக்கு இது அருமருந்து. வெங்காயம் வெட்டுகையில் கண்ணீர் வருவதுக்கு காரணம் அதில் உள்ல சல்பைடு. ஆனால் அது நம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள மிக உதவும். டயபடிஸ் உள்ளவர்களுக்கு வெங்காயத்தில் உள்ள க்ரோமியம் இன்சுலினை நன்றாக சுரக்கவும் உதவி சுகரை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஆனால் பச்சை வெங்காயத்தின் இயற்கையான சுவையே அதை உண்டு ரசிக்க போதுமான காரணமாகும். இறைச்சியுடன் சேர்கையில் அது வழங்கும் இயற்கையான சுவைக்கு ஈடாக எந்த மசாலாவும் வருவதில்லை என்பதே உண்மை.

இந்த சுவையான, மூதாதையரின் சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.

கிரீன் சிக்கன் டிக்கா


தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 kg
பச்சை மிளகாய்  - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
புதினா - ஒரு கைபிடி
கொத்தமல்லி - சிறிதளவு 
எலுமிச்சை சாறு - பாதி
மஞ்சள் பொடி - 1/2 tsp
நெய் - 2 tsp
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும். 
* சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 3 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும். 
* ஊறிய சிக்கனை அவனில் கிரில் செய்து எடுக்கவும். 
* அவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை வேக விட்டு எடுக்கவும். 
* சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Faulin Diana" அவர்களுக்கு நன்றி.

இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து குடுத்த "Lakshmi Mani" அவர்களுக்கும் நன்றி.







மட்டன் கீமா வடை



தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 150 gm
வெங்காயம் நறுக்கியது - பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 4 பல்(3inches)
கொத்தமல்லி இழை
உப்பு
நெய்

செய்முறை:

* சிறிதளவு தண்ணீரில் மட்டன் கீமா, இஞ்சி பூண்டு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். 
* கறி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டால் போதும், அதிகம் தேவையில்லை. தண்ணீர் வற்றும் வரை கறியை வேக விடவும். 
* இறங்குவதற்கு 5 நிமிடங்கள் முன்பு பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பை அனைத்து ஆற விடவும். 
* இதனுடன் நறுக்கிய தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும். 
* உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும். 
* தோசை கல்லில் மிதமான சூட்டில் நெய் விட்டு அரைத்த கலவையை சிறிய வடைகளாக தட்டி போடவும். 
* ஒரு பக்கம் நன்கு வெந்த பிறகு நெய் விட்டு திருப்பி போட்டு வேக விடவும். 

சுவையான மட்டன் கீமா வடை ரெடி.

இந்த சுவையான, பாரம்பரிய சமையல் குறிப்பினை வழங்கிய "Faulin Diana" அவர்களுக்கு நன்றி.

இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம்  செய்து குடுத்த "Lakshmi Mani" அவர்களுக்கும் நன்றி. 

Tuesday, September 29, 2015

Mussels கறி



தேவையான பொருட்கள்:
Mussels -250 gms
சிகப்பு, பச்சை குடை மிளகாய் - பாதி அளவு
வெங்காயம் நறுக்கியது - பாதி
தக்காளி - 1
பூண்டு - 7-8 பல்
கேரட் நறுக்கியது - பாதி
மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - 3 tbsp 

செய்முறை:
* சூடான கடாயில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். 
* வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு தக்காளி சேர்க்கவும். 
* தக்காளி வெந்த பிறகு மசாலா பொடி, உப்பு மற்றும் Mussels சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். 
* இதனுடன் நறுக்கிய கேரட் சேர்த்து மேலும் 5-7 நிமிடங்கள் வேக விடவும். 
* சுவையான ட்ரை Mussels கறி தயார்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Sugu Bala" அவர்களுக்கு நன்றி.

தமிழாக்கம்: Lakshmi mani அவர்களுக்கு நன்றி.

Egg Custards (No Sweets)


தேவையான பொருட்கள்: 
வெள்ளை காளான் - 1 கப் 
முட்டை - 4 
பேகன்  - 5  (option)
தேங்காய் பால் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
மிளகுத்தூள்  - தேவையான அளவு 
Chives chopped - 2 tbsp

செய்முறை: 
* முட்டையுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
* ஒரு வாயகன்ற பாத்திரத்தில் (Pan) பேகனை சிறிது நேரம் வேக விட்டு தனியாக வைக்கவும்.
* அதே பாத்திரத்தில் அதே பேகன் எண்ணையில் காளான்களை வதக்கி எடுக்கவும்.
* அந்த அடித்த வைத்த முட்டையுடன் வதக்கிய காளான் மற்றும் பேகனை சேர்த்து கலக்கவும்.
* இக்கலவையை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, Pre heat செய்யப்பட்ட 350 டிகிரி F ல் 30-40 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். 

Recipe from a paleo book. 

மைதிலி தியாகு 

Monday, September 7, 2015

கிரில்ட் கிங் ஃபிஷ் தந்தூரி





தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் – 500 கிராம்
ஆச்சி தனி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
ஷான் தந்தூரி மசாலா – 1 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு – இரண்டு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைகரண்டி
தண்ணீர் சிறிது
ஆலிவ் ஆயில் – 4 தேக்கரண்டி


செய்முறை:
* மீனை நன்கு அலசி சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்
லெமன் சாறு பிழிந்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாக்களை பேஸ்டாக்கி மினில் இருபுறமும் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* எலக்ட்ரிக் கிரில்லில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு இடை இடையே ஆலிவ் ஆயில் ஊற்றி நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.


குறிப்புகள் :  
இது சாப்பிடுபவர்கள் அளவை பொருத்து காலிப்ளவர் தேங்காய் சாதம், அவகோடா சாலட், மீன் குழம்புடன் சாப்பிட்டதால் எனக்கு கிரில் குறைவாகவே தேவைப்பட்டது இரண்டு பெரிய மீன் துண்டுகள்.
எலக்ரிக் கிரில் என்பதால் இதில் தயிர் சேர்க்கவில்லை அதற்கு பதில் எலுமிச்சை சாறு சேர்த்துள்ளேன்.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.

கருவேப்பிலை சிக்கன்




தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் எலும்புடன் – 300 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தக்காளி – ஒன்று சிறியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நெய் – வறுக்க( 2 தேக்கரண்டி)
கருவேப்பிலை – சிறிது


செய்முறை:
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் தக்காளியை பிழிந்து வெட்டி போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து நன்கு கலக்கு அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் கருவேப்பிலையை இரண்டாக கிள்ளி போட்டோ அல்லது அப்படியே வோ தூவி கிளறி வையுங்கள்.
* இரும்பு வானலியில் நெய் விட்டு காயவைத்து வெந்த சிக்கனை சேர்த்து வறுத்து எடுக்கவும்
வறுக்கும் போது ரொம்ப டிரைஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்
* இது சிம்பிள் மெத்தட் சும்மா சாப்பிட அருமையாக இருக்கும் எத்தனை பீஸ் சாப்பிட்டாலும் திடக்காது.
* தேவைபடுபவர்கள் அதாவது சிக்கன் சூடு ஒத்து கொள்ளாது என்று நினைப்பவர்கள் எலுமிச்சை சாறு கடைசியாக பிழிந்து சாப்பிடாலும் நல்ல இருக்கும்.


இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.


Monday, August 24, 2015

கேரளா ஸ்டைல் தேங்காய்பால் மட்டன்



தேவையான பொருட்கள்:
மட்டன் - 200 கிராம்
மிளகாய் பொடி - 3 ஸ்பூன் ( காரம் அதிகம் உள்ளது)
இஞ்சி - கட்டை விரல் அளவு ஒரு துண்டு
கறுவேப்பில்லை - சிறிது
உப்பு- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
தேங்காய் பால்- 250 எம் எல் டின் அல்லது கறி மூழ்கும் அளவு.

செய்முறை:
* மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி வாணலியி இட்டு அத்துடன் மிளகாய் பொடி, பொடியாக வெட்டிய இஞ்சி, கறுவேப்பில்லை, உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை விட்டு பிசறி வைக்கவும். 10 நிமிசம் இருந்து 30 நிமிஷம் வரை ஊற வைக்கலாம்.
* பின்பு கறி மூழ்கும் வரை தேங்காய் பாலை விட்டு கேஸில் சிம்மில் வைத்து வேகவிட்டு கறி வெந்து சுண்டி திக் குழம்பு பக்குவத்தில் வரும் போது இறக்கவும்.
* இதை மேற்கொண்டு சுண்டவிட்டு செமி டிரையாக எடுத்து அப்படியேவும் சாப்பிடலாம்.
குறிப்பு: எந்தவிதமான மசால பொருட்களும் கலக்காத கறியின் ஒரிஜனல் டேஸ்ட்யை தேங்காய்பாலோட சேர்த்து கொடுக்கும் டிஷ் இது.

இந்த சுவையான & ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி.

மட்டன் கொழுப்பு வறுவல்


தேவையான பொருட்கள்:
மட்டன் கொழுப்பு - 200gm
சின்ன வெங்காயம் - 10 nos ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1tsp
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/4 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
தேங்காய் எண்ணெய் - 2 tbl ஸ்பூன் (அ) வெண்ணை - 10gm
உப்பு , மிளகு தூள் - தேவையான அளவு 

செய்முறை: 
* கடாயில் தே எண்ணெய் / வெண்ணை காயவைத்து வெங்காயம், கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வணக்கவும். 
* நன்கு வணங்கிய பின் மட்டன் கொழுப்பு, மஞ்சள் தூள் , மிளகாய் தூள் போட்டு வணக்கவும். மட்டன் கொழுப்பில் இருக்கும் தண்ணீர் ஏற்றவாறு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். 
* மட்டன் கொழுப்பு நன்கு வெந்தவுடன் மிளகு தூள் , கொத்தமல்லி தலை தூவி இறக்கிவிடலாம். மட்டன் கொழுப்பு வறுவல் ரெடி!
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Sumi Venkat" அவர்களுக்கு நன்றி. 

புகைப்படம்: Selvakumar Guruswamy அவர்களுக்கும் நன்றி.

சிக்கன் சூப் (நாட்டுக்கோழி)



தேவையான பொருட்கள்:
கோழி- 350 கிராம்
வெங்கயம் - 1ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
கொத்துமல்லி விதை- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4 (உங்க விருப்பம் போல)
பட்டை- 2 துண்டு
தக்காளி- 1
வெங்காயம்-1 (சிறிய வெங்காயம் என்றால் 50 கிராம்)
பூண்டு - 4 பல்
உப்பு

செய்முறை:
* கோழியை வெட்டி கழுவி மஞ்சள் பொடிபோட்டு பிசறி பின்பு கழுவி வைத்துவிடவும். 
* தனியாக ஒரு பேனில் வெந்தயம், சீரகம்,கொத்துமல்லி,காய்ந்த மிளகாய் , பட்டை எல்லாத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக்கொள்ளவும். 
* கோழியை வாணலியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் வெட்டிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பொடித்த மசாலா , உப்பு சேர்த்து மீடியமில் வைத்து நன்றாக கொதி வந்ததும் சிம்மில் வைத்து சிக்கன் வெந்து அதன் டேஸ்ட் இறங்கும் வரை வைத்து கறுவேப்பில்லை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
* ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காமல் செய்தது ஆனால் சூப்பின் மீது மிதக்கும் எண்ணெய் பாருங்க அத்தனையும் கோழியின் கொழுப்பு.

இந்த பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி. 

பொருநன் வறுவல் ரெசிபி






தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கொழுப்பு கால் கிலோ
காளான் கால் கிலோ
தக்காளி 2
பெரிய வெங்காயம்- அரை
உப்பு- 2 டிஸ்ப்பூன்
இறைச்சி மசாலா பவுடர்- 2 டிஸ்பூன்

செய்முறை:
* வாணலியை எண்னெய் இல்லாமல் நன்றாக சூடாக்கவேன்டும். 
* கொழுப்பே எண்ணெய் என்பதால் தனியாக எண்னெய் அவசியம் இல்லை. அதன்பின் அதில் ஆட்டுக்கொழுப்பை இடவேண்டும். 
* கொழுப்பு சூடாகி சற்று உருகதுவங்கியவுடன் அதில் வெங்காயம், தக்காளி, காளானை இட்டு உப்பு, பவுடரை இட்டு நன்றாக கலக்கவேண்டும். 
* ஒரு ஏழெட்டு நிமிடத்தில் சுவையான பொருநன் வறுவல் தயாராகிவிடும்.

இந்த சுவையான மற்றும் பாரம்பரிய உணவினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

Wednesday, August 19, 2015

ஸ்டிர் ஃப்ரை சிக்கன் வித் வெஜிடபிள்


தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200 கிராம்
பட்டன் மஸ்ரூம்- 10
செலரி - 2 ஸ்டிக்
கேரட் - 1
வெங்காயம் -1
ரெட் காப்சிகம்- 1
காலிஃப்ளவர்+ப்ரொக்கோலி- 6 துண்டு
டொமோட்டோ சாஸ்- 2 ஸ்பூன்
பெப்பர் பவுடர் - 1 ஸ்பூன்
Cayenne chilly powder- 1/2 ஸ்பூன் ( நார்மல் மிளகாய் தூளும் போடலாம்)
தைம் (thyme )- 3 ஆர்க்

செய்முறை:
* சிக்கனை ஸ்ட்ரிப் ஆக வெட்டிக்கொள்ளவும் தோலுடன், பானில் ஆலீவ் ஆயில் அல்லது வெண்ணெய் சேர்த்து சிக்கனை நன்கு ஸ்ட்ரை ப்ரை செய்யவும் காஸ்யை ஹை ப்ளேமில் வைத்து. லைட் ஆக ப்ரவுன் கலர் வந்தவுடன் சிக்கனை பானில் இருந்து எடுத்துவிட்டு அதே பானில் வெட்டி வைத்து இருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் ஹைப்ளேமில் காய்கள் அரை பதம் வெந்ததும் சிக்கன், சோயாசாய், டொமோட்டோ சாய், பெப்பர், மிளகாய்தூள், உப்பு எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி வாசனைக்கு தைம் சேர்த்து இறக்கவும். கொத்துமல்லி இலையும் சேர்க்கலாம். காய் முக்காபதம் வெந்து இருந்தால் போதும்.


இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

சிக்கன் லெட்டூஸ் கப்




தேவையான பொருட்கள்:
சிக்கன் - 100 கிராம்
கார்லிக் பவுடர் - 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள்- 1/2 ஸ்பூன்
பெப்பர் தூள்- 1/2 ஸ்பூன்
சால்ட் - தேவையான அளவு
டொமேட்டோ பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 2 ஸ்லைஸ்
தக்காளி - 2 ஸ்லைஸ்
வெள்ளரி - 1 துண்டு
லெட்டூஸ் - 2 இதழ்

செய்முறை:
* சிக்கனை கார்லிக் பவுடர்,பெப்பர்,மிளகாய்தூள், சால்ட், டொமேட்டோ பேஸ்ட் போட்டு நன்கு பிரட்டி அரை மணி ஊற வைக்கவும்.
* பின்பு கிரில் செய்து எடுத்து. லெட்டூஸ் இதழில் வைத்து மேலே தக்காளி, வெங்காயம். வெள்ளரி கொண்டு அலங்கரிக்கவும்.
* அப்படியே சுருட்டி சாப்பிடலாம் இல்லை என்றால் உங்கள் மனம் கவரும் டிப்பிங் சாஸ்சுடன் சாப்பிடலாம்.


இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

Monday, August 17, 2015

Thalana Batu Haalmasso Baduma




தேவையான பொருட்கள்:
தாய்லாந்து பச்சை கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் மீடியம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பல்
கருவேப்பிலை - கொஞ்சம்
ரம்பா இலை - சிறிய துண்டு
சில்லி பிளேக்ஸ் - காரத்திற்கேற்ப 
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மாலத்தீவு கருவாடு - பொடித்தது 
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணை - 2-3 டேபிள்ஸபூன்

செய்முறை:
* கத்தரிக்காய் வாங்கும் போது சிறிய கத்தரிக்காயாக பெரிய நெல்லிக்காய் அளவு உள்ளது வாங்கவும். கத்தரிக்காய்களை கல்லால் தட்டினால் இரண்டாக உடையும். கத்தியால் அறுக்கக்கூடாது. கசப்பாகி விடும். தட்டியதும் தண்ணீரில் போடவும். இல்லாவிட்டால் நிறம் மாறிவிடும். தட்டிய கத்திரிக்காயை ஒரு ஸ்பூனால் உள்ளே உள்ள விதைகளை நீக்கவும். விரலை உபயோகித்தால் கறை ஏற்படும். நன்றாக கழுவி விதைகளை சுத்தமாக நீக்க்கவும். மீனை சுத்தப்படுவது போன்ற வேலை. விதைகள் மிகவும் கடினமாகவும், நிறைந்தும் இருக்கும். நமக்குத்தேவை சதைப்பற்று மாத்திரம்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பூண்டை வதக்கவும். உடனே வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் கருவாட்டு பொடியை போடவும். அத்துடன் சுத்தம் செய்த கத்தரிக்காய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்றவேண்டாம். வேண்டுமென்றால் லேசாக விரலினால் தண்ணீர் தெளிக்கலாம். இப்பொழுது மூடி போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். இடையில் அடிபிடிக்காதவாறு பிரட்டி விடவும். வெந்தவுடன் இறக்கவும்.
* மாலத்தீவு கருவாடு கிடைக்காதவரகள் நெத்திலி கருவாட்டை கழுவி வெங்காயம் போட்டு தாளித்தவுடன் போடலாம். சிறிது முறுகவிடவும். பின்பு கத்தரிக்காய் சேர்க்கலாம்.

குறிப்பு: இந்த ரெசிபி பெயரைப் பார்த்து பயப்பட வேண்டாம். இது நம் ஊர் பெயரில் கருவாட்டு கத்தரிக்காய் பிரை என்று சொல்லாம். இருபது வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டில் ஒரு ஶ்ரீலங்கா சமையல்காரர் ஒருவர் இருந்தார். அவர்கள் ஊர் ரெசிப்பிகளைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்வார். அதனால் தினமும் ஒரு வேளை அவர்கள் சமையலை செய்ய சொல்வோம். சிறிது காரமாக இருந்தாலும் சுவையாக இருக்கும். இவர்கள் அதிகம் கீரைகள், கத்தரிக்காய், தேங்காய்ப்பால், மஞ்சள், குத்து மிளகாய் (chilly flakes), ரம்பா இலை, தேங்காய் எண்ணெய், மாலத்தீவு கருவாடு என்று நிறைய சேர்த்துக் கொள்வார்கள். இது பாலாட்டும் தாய்மார்களுக்கு நல்லது என்பதால் இன்று மகளுக்காக சமைத்தது.

இந்த சுவாரசியமான,சுவையான,ஆரோக்கிய  சமையல் குறிப்பினை அனுப்பிய "Abdul Farook"அவர்களுக்கு நன்றி :)




Friday, August 14, 2015

ஈசி சிக்கன் கறி



தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 gms
தயிர் - 100 ml
இஞ்சி பூண்டு விழுது 
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி - 2tbls
மல்லி பொடி
மிளகு பொடி - 2tsp
வினிகர் - 1tsp அல்லது பாதி எலுமிச்சை
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு

ஊறவைக்க
* சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, மிளகு பொடி, வினிகர் அல்லது பாதி எலுமிச்சை, உப்பு சேர்த்து குளிர் சாதன பெட்டியில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். 

செய்முறை: 
* ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கறிவேப்பிலை மற்றும் ஊற வைத்த சிக்கனை போட்டு கொதிக்கும் வரை விடவும். 
* இடையில் சிக்கனை திருப்பி விடவும், சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது. நன்கு வெந்த பிறகு தண்ணீர் வற்ற விடவும். 
* கடைசியில் கொத்தமல்லி தழை போடவும்.

இந்த ஆரோக்கிய ஈசி சிக்கன் கறி சமையல் குறிப்பினை வழங்கிய "Arun K Chandran"அவர்களுக்கு நன்றி :)

இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து அனுப்பிய "Shan Mani" அவர்களுக்கு நன்றி :)









Tuesday, August 11, 2015

லாம்ப் மசாலா (lamb Masala)



தேவையான பொருட்கள்:-

செம்மறி ஆட்டு கறி கொழுப்புடன் 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக வெட்டி மஞ்சள் கலந்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும் )
பெரிய மஞ்சள் நிற வெங்காயம்( பேலியோவிற்கு சிறந்தது)  - 1 150 கிராம் (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
இஞ்சி/பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி (வீட்டில் அரைத்து பயன்படுத்துவது நன்றாக இருக்கும்)
தக்காளி - 2 சிறியது - 100 கிராம் ((பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 4 (காம்பை நீக்கிவிட்டு நீல வாக்கில் பிளந்து கொள்ளவும் )
பொதினா/கொத்தமல்லி - ஒரு கை அளவு பொடியாக நறுக்கியது.
குழம்பு பொடி - 2 மேஜை கரண்டி.
மஞ்சள் பொடி - 1 சிறய கரண்டி 
ஆலிவ் எண்ணை (அல்லது )தேங்காய் எண்ணை - 2 மேஜை கரண்டி 

செய்முறை:-

* ஒரு சிறிய குக்கர் இல் ஆலிவ் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி கொள்ளவும்.எண்ணை காய்ந்தவுடன் பச்சை மிளகாய்  நறுக்கிய வெங்காயத்தை உப்பு கலந்து நன்றாக வதக்கவும், வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி/பூண்டு விழுது கலந்து நன்றாக வதக்கவும். 
* பச்சை வாடை போனவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் மற்றும் குழம்பு பொடி கலந்து நன்றாக கிளறி விடவும். 
* பிறகு நறுக்கிய செம்மறி ஆட்டு கறியை கலந்து நன்றாக மசாலா படும்படி பிரட்டி விடவும். பிறகு பொதினா கொத்தமல்லி இலைகளை துவி ஒரு 200 கிராம் தண்ணீர் கலந்து நன்றாக பிரட்டி விடவும். * பிறகு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு 10 விசில் வரும்வரி சமைக்கவும். பிறகு ஆவி அடங்கும் வரை  பொருத்திருந்து  பின் குக்கர்ஐ திறக்கவும். கொஞ்சம் தண்ணீர்ராக இருந்தால் மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் உங்கள் தேவைகேற்ப வற்றும் வரை  கிளறி விடவும்.  


இந்த புதுமையான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK" அவர்களுக்கு நன்றி :)

Saturday, August 1, 2015

பட்டேல் ஸ்டைல் மட்டன்



தேவையான பொருட்கள்: 
மட்டன் - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தக்காளி பேஸ்ட் (அ) அரைத்த தக்காளி - 1/2 கப் (அ) நறுக்கிய பழுத்த தக்காளி பழம் - 1
தேங்காய் எண்ணெய் & வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க:
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
பூண்டு  - 5 பல்
இஞ்சி - 1 இஞ்ச்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
* ஒரு குக்கரில் வறுத்து அரைக்கக் குடுத்த அனைத்தையும் தேவையான தேங்காய் எண்ணையில் வதக்கிக்கொள்ளவும் (சிறிது வதக்கினால் போதும்). இதனை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
* அதே குக்கரில் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும், அதில் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
* பின்பு மிளகாய்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து, பொடிகளின் பச்ச வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் பிறிந்து வரும்.
* இப்பொழுது அரைத்த விழுது சேர்த்து சிறிது வதக்கவும்.
* தக்காளி பேஸ்ட் (அ) அரைத்த தக்காளி - 1/2 கப் (அ) நறுக்கிய பழுத்த தக்காளி பழம், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கர் மூடிவைத்து 25 நிமிடங்கள் அல்லது 8 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
* விசில் அடங்கியதும், அடுப்பை பெரும் தீயில் வைத்து, சுருண்டு புகைப்படத்தில் உள்ளது போல் வரும் வரை  வறுத்து  (தீயாமல் பார்த்துக்கொள்ளவும்) சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: முட்டை பணியாரம்,முட்டை ஆம்லெட்,பேலியோ ப்ரட்,பேலியோ ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள வேண்டுமெனில், தண்ணீர் கொஞ்சம் அதிகம் விட்டு 8 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து மல்லி தூவி பரிமாறவும்.

இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கியவர் "Mythili Thiyagu".