Thursday, May 21, 2015

பைசன் ரிப் ஐ ஸ்டேக்


இன்றைய உணவு: 
ரிப் ச்டேக் என்பது எருமையின் நெஞ்சுபகுதி மாமிசம். மிகுந்த கொழுப்பு சத்தும், கொலஸ்டிராலும், உறைகொழுப்பும் நிரம்பிய அதியற்புத உணவு. வீட்டில் இருந்து ஏழுமைல் தொலைவில் உள்ள பண்னையில் மிக மலிவாக கிடைத்தது. பவுண்டு எட்டுடாலர். கடைகளில் 11 முதல் 15 டாலர் வரும். சுமார் 700 கிராம் ஸ்டேக் இன்றைய உணவுக்காக எடுத்து சுத்தம் செய்தேன்.

ஸ்டேக் உண்பதும், சமைப்பதும் ஒரு தனி அனுபவம்...முக்கால் கிலோ ஸ்டேக்கில் சுமார் 1500 காலரி இருக்கும். சுமார் 75% கொழுப்பு மட்டுமே. இதை நன்றாக கழுவவேண்டும். கழுவி பேபப்ர் டவலால் நன்றாக துடைக்கவேண்டும். அதன்பின் மேலே 2- 3 ஸ்பூன் உப்பை இருபக்கமும் தூவவேண்டும். அதன்பின் நாலைந்து ஸ்பூன் பெப்பர். ஸ்டேக்கை பொறுத்தவரை அதிகமாக மசாலா எதுவுமே வேண்டியதில்லை. உப்பும், மிளகுமே போதும்

அதன்பின் ஒன்று உடனடியாக எடுத்து வாணலியில் வைக்கவேண்டும். அல்லது குறைந்தது 1 மணிநேரம் காத்திருக்கணும். காரணம் என்னவெனில் உப்பு இறைச்சியில் உள்ல ஜூஸை எல்லாம் வெளியே கொண்டுவரும். ஆனால் 45 நிமிடம் விட்டால் அதை மீண்டும் உள்ளிழுத்துக்கொள்ளும். இதை ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் என்பார்கள். இப்படி செய்தால் சுவை கூடும்

அதன்பின் வாணலியை எடுத்து ஏழெட்டு ஸ்பூன் நெய்யை விடவேண்டும். சற்று அதிக வெப்பத்தில் வாணலியை வேகவிடவேண்டும். நெய் அளவு அதிகமானால் பிரச்சனை இல்லை. அதை டிப்பிங் சாஸாக பயன்படுத்தலாம்

இப்ப வெட்டி வைத்த ஸ்டேக்கை எடுத்து வாணலியில் வைக்கவும். வைத்ததும் சள,சள என வாணலியில் சத்தம் கேட்கணும்....அடுத்து உயர்வெப்பத்தில் இறைச்சி ஒரு ஐந்து நிமிடம் வெந்தபின் திருப்பி அடுத்த பக்கத்துக்கு மாற்றவும். அதில் ஒரு ஐந்து நிமிடம்.

இறைச்சி ஆனதா என்பதை கண்டறிய மீட் தெர்மாமீட்டர் என கடைகளில் வைப்பார்கள். அதை எடுத்து இறைச்சியின் நடுபக்கம் வரை குத்தினால் 165- 170 டிகிரி காட்டினால் அதை "வெல்டன்" (நங்கு வெந்த மாமிசம்) என அழைப்பார்கள். 145 டிகிரி, 150 டிகிரியில் எடுத்தால் மீடியம், மீடியம் ரேர் என அழைக்கபடும்.

அதன்பின் இறைச்சியை எடுத்து தட்டில் வைக்கவும்..உடனே உண்னவேண்டாம். 10 நிமிடம் காத்திருக்கவும். அப்போதுதான் இறைச்சியில் உள்ள ஜூஸ் எல்லாம் மையபகுதிக்கு இறங்கும். உடனே உண்ன ஆரம்பித்தால் ஜூஸ் தட்டில் வழிந்துவிடும். 10 நிமிடம் கழித்து ஒரு கத்தி (உணவு உண்ணும் கத்தி போதாது. ஸ்டேக் கத்தி தனியாக கிடைக்கும்) மற்றும் போர்க்குடன் உண்ண துவங்கலாம். இறைச்சி 10 நிமிடம் காத்திருக்கையில் அதன் மேலே நான் சில துண்டு வெண்னெயை வைத்தேன். அது உருகி வழிந்து இறைச்சியுடன் செம்புலபெயர் நீர் போல கலந்தது

வானலியில் உள்ள நெய், ஸ்டேக்கில் கலந்து பிரவுன் கலரில் காட்சியளிக்கும். அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின் கத்தியால் சின்ன துண்டாக வெட்டி எடுத்து டிப்பிங் சாஸில் தொட்டு உண்டால்

அதற்கு ஒப்பான அனுபவமாக உலகில் எந்த உணவையும் கூற இயலுமா என்பது சந்தேகம் தான். பேகனை உண்பதை மாத்திரமே கூற இயலும் என நினைக்கிறேன்...ஜூஸி சிகப்பிறைச்சி நம் வயிற்றில் இறங்க, இறங்க அதை கண்ணை மூடி ரசித்து உண்டால் நம் ஆதிமூதாதையர் இதே போல பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காட்டுகுகையில் ஸ்டேக்கை நெருப்பில் சுட்டு உண்டு மகிழும் நினைவு வரும்..இந்த ப்ரைமல் சுவை (primal taste) நம் ஜீன்களுக்கு பேரானந்தம் அளிக்கும் தன்மை கொண்டது...தமிழ்நாட்டில் பொதுவாக சிக்கன், மீன் மிஞ்சினால் ஆடு...அதுக்கு மேல் போவது கிடையாது.இறைச்சியை பொறுத்தவரை சிக்கன், மீன் எல்லாம் குழந்தைகள் சாப்பிடலாம்..ஆடு ஒரு அளவு ஓக்கே..ஆனால் அதுக்கு மேலே போய் பெரிய மிருகங்களை உண்கையில் கிடைக்கும் சுவையை இந்த குட்டி மிருகங்கள் எல்லாம் கொடுக்கவே கொடுக்காது......

சின்ன சின்ன துண்டாக வெட்டி எடுத்து நெய்யில் தொட்டு உண்கையில் ஒவ்வொரு துண்டும் தனி தனி சுவையை அளிக்கும்....நடுவே உள்ள மாமிசம் பிங் நிறத்திலும், அதை சுற்றி உள்ள மாமிசம் சிகப்பு நிறத்திலும் மேலே உள்ள மாமிசம் பிரவுன் நிறத்திலும் இருக்கும்....ஒவ்வொன்றும் தனி சுவை...இழுக்க, இழுக்க பேரின்பம்..பற்கள் முழுக்க இறைச்சிதுண்டுகளால் நிரம்ப அதை குத்தி எடுத்தபடிதான் இத்தனை இறைச்சியையும் உண்ணமுடியும்...வெறுமனே உண்ணமுடியாது...

இதை உண்டு முடிக்க சுமார் முக்கால் மணிநேரம் ஆனது. அதன்பின் பல் குத்தி பிளாஸ் செய்ய ஒரு 15 நிமிடம்.....மணகண்ணில் பலலட்சம் ஆண்டு பின்சென்று காட்டுகுகையில் குடும்பத்துடன் நெருப்பை சுற்றி அமர்ந்து ஸ்டேக்கை பகிர்ந்து உண்டு, அதன்பின் குச்சியால் பல்லைகுத்திய ஆதிமூதாதையர் நினைவுக்கு வந்தார்கள்...உணவு என்பது அன்று ஒரு சமூகமாக கூடிமகிழும் தருணம்..அதன் காரணம் ஸ்டேக்கே...

இத்தனை பேரானந்தம் அளிக்கும் ஸ்டேக் மட்டுமே இன்றைய உணவு...ஒரு வேளை உண்பவன் யோகி என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? ஸ்டேக்கை உண்டால் நாமும் யோகியே..


வாழ்க ஸ்டேக். இத்தனை சுவையான இறைச்சியை கொடுத்த அந்த எருமையின் ஆன்மா பரமன் பாதம் அடைந்து நற்கதி பெறவும் பரம்பொருளை வேண்டிக்கொண்டேன்....

இந்த பெருமை முழுதும் "நியாண்டர் செல்வன்" ஜி அவர்களுக்கே சேரும். நன்றி :)


No comments:

Post a Comment